விகடனுக்கு 2.6.96 அன்று கவுண்டமணி அளித்த பேட்டி உங்களுக்காக:
இந்தியாவில் இன்று அதிகம் சம்பாதிக்கிற நடிகர் இவர்தான் என்று பேச்சு. இவருடைய கால்ஷீட் கிடைத்த பிறகுதான் படத்துக்கு பூஜை. இவர் வந்து இறங்கும்போது ஹீரோக்களுக்கு இணையாக ஷூட்டிங் ஸ்பாட் சலசலத்து அடங்குகிறது.
இளம் நடிகைகள் சிலரை இவரோடு இணைத்து கிசுகிசுக்கிறார்கள். கடந்த வாரத்தில் இவர் வீட்டில் வருமான வரித்துறை நடத்திய ரெய்டு தான் கோடம்பாக்கத்தின் பரபரப்பு பேச்சு!
இளம் நடிகைகள் சிலரை இவரோடு இணைத்து கிசுகிசுக்கிறார்கள். கடந்த வாரத்தில் இவர் வீட்டில் வருமான வரித்துறை நடத்திய ரெய்டு தான் கோடம்பாக்கத்தின் பரபரப்பு பேச்சு!
ஜகஜவென நைலக்ஸ் லுங்கி, ஒரு பட்டன் கூடப்போடாத சட்டையோடு வீட்டில் உட்கார்ந்திருந்தார் கவுண்டமணி. லேசான தொந்தியை தாண்டி மூன்று முழ நீளத்திற்கு ஒரு தங்கச்சங்கிலி, தங்க பிஸ்கட் கோத்து போட்டிருக்கிறார். வயது 63 என்கிறது அவரது நெருங்கிய வட்டாரம். அதன் ஒரே அடையாளம் முன் தலையின் வழுக்கை மட்டுமே.
விகடன்: தியேட்டர்ல படம் ஆரம்பிச்சி 20 நிமிஷம் ஆனதும் சடார்னு ப்ரேமுக்குள்ள நுழையறீங்க. நீங்க பேசுறதுக்கு முன்னாடியே உங்க முகத்தை பார்த்து தியேட்டர் சிரிப்புல அதிருது. விசில் பறக்குது. எப்படி சாதிச்சீங்க?
கவுண்டர்: இன்னிக்கி நாட்ல உள்ள ஏகப்பட்ட பிரச்னைகளை மீறி மக்களை சிரிக்க வைக்கிறது என்கிற விஷயத்தை ஒரு பார்முலா மாதிரி போட்டு கண்டு புடிச்சிற முடியாது. சிரிக்க வைக்கக்கூடிய சங்கதி தானாகத்தான் ஒருத்தனுக்குள்ள அமையனும். அது 'ப்ளட்'னு வச்சுக்கோங்களேன்.
15 வருஷத்துக்கும் மேல காமடி பண்றேன். எனக்கு முன்னால எவ்வளவோ பேர் சாதிச்சி இருக்காங்க. எனக்கு பிறகு வந்தவங்களும் நிறைய இருக்காங்க. எப்படியோ கடவுள் அருளால ஜனங்களுக்கு நம்மள புடிச்சி போச்சி. கவுண்டமணின்னா என்னவோ ஒரு கிரேசி".
விகடன்: நடிக்க வந்தது எப்படி?
கவுண்டர்: நமக்கு சொந்த ஊரு உடுமலைப்பேட்டை. வீட்ல விவசாயம் பாத்தாங்க. சினிமாவுக்கும், நமக்கும் ரொம்ப லாங்கு. லாங்குன்னா இப்படி அப்படி லாங் இல்லை. அமேரிக்கா அளவுக்கு தூரம். அவங்க யாரும் டாக்கீஸ் பக்கம் கூட போனதில்ல. சின்ன வயசுல நடிக்கனும்னு வெறி எனக்கு. காமடியா, வில்லனா, ஹீரோவா..அதெல்லாம் முடிவு பண்ணல. நடிகன் ஆயிடணும். அதான் லட்சியம். 12 வயசுல நாடக கம்பனில செந்தேன். பாய் கம்பனில இருந்து ஜோதி நாடக சபா வரை எல்லாத்துலயும் இருந்தேன். எல்லா வேஷமும் போட்டேன். கூச்சம், பயமெல்லாம் போயி நம்மால முடியும்னு தைரியம் வந்துச்சி. அப்பதான் சினிமா சான்சும் வந்துச்சி.
விகடன்: 16 வயதினிலே உங்க முதல் படம். அதில் கண்ணெல்லாம் சுருங்கி போயி கன்னத்து எலும்பெல்லாம் நீட்டிக்கிட்டு இருக்கும் உங்களுக்கு. அதாவது வறுமை?
கவுண்டர்: (சட்டென்று இடைமறித்து) அதெல்லாம் சும்மா சார். வறுமையாவது ஒண்ணாவது. சினிமாவுக்கு முன்னாடி நாடகத்துல இருந்தேன்னு சொல்றேனே. வேளா வேளைக்கு சோறு. அதிகம் இல்லாட்டியும் பொழுதை தள்றதுக்கு காசு கிடைச்சிட்டு தான் இருந்துச்சி. வளர்ந்து பெரிய ஆள் ஆன பிறகு 'ஒரு காலத்துல பணத்துக்கு லாட்டரி அடிச்சேன்..துண்டு பீடிதான் புடிச்சேன்' ன்னு சொல்றது இப்ப ஒரு பேஷன் ஆகிப்போச்சி. அதெல்லாம் நான் சொல்ல மாட்டேன்.
விகடன்: அந்த பெட்ரோமாக்ஸ் காமடி?
கவுண்டர்: ஆமாமா. 'இதுல எப்பிடிண்ணே லைட் எரியுது?' ன்னு செந்தில் கேப்பான். 'அடேய்..இதுதான் மேண்டில். இதுலதான் பளீர்னு லைட் எரியுது'ன்னு நான் சொல்லிட்டு இருக்கும்போதே செந்தில் மேண்டிலை எடுத்து நசுக்கிப்புட்டு, 'என்னண்ணே..ஒடச்சி புட்டீங்க?'ன்னு கேப்பான்(கவுண்டர் முகத்தில் சிரிப்பு பரவுகிறது). அப்ப நான் உடனே பதில் சொல்லாம கேமரா பக்கம் திரும்பி டென்ஷனா ஒரு லுக் விடுவேன். ஆடியன்ஸ் விழுந்து பொறண்டு சிரிக்கும். (அந்த காட்சியை செய்து காட்டுகிறார்). அந்த இடத்துல அப்படி ஒரு லுக் விட்டாலே போதும்னு யார் சொல்லி குடுத்தா? நமக்கா தோணுது. அதைத்தான் ப்ளட்னு சொல்ல வர்றேன்.
விகடன்: கோயம்புத்தூர் மண்ணுக்கும் சினிமாவில் காமெடிக்கும் ஏதோ தொடர்பு இருக்கும் போலிருக்குதே! நிறைய பேர் அங்கிருந்து வர்றாங்க..
கவுண்டர்: ஏங்க... மண்ணுக்கும் காமடிக்கும் என்னங்க சம்மந்தம்? அது என்ன கிழங்கா, மண்ணுல விளையறதுக்கு? அப்படியெல்லாம் எதுவும் கிடையாது. என்ன..அந்தப்பக்கம் கொஞ்சம் லொள்ளு ஜாஸ்தி! வீட்ல சொன்னபடி கேக்காம ஏடாகூடமா தப்பு பண்ணிப்புட்டு அப்படி இப்படின்னு கிடந்து வர்றாங்க. இங்கே பெரியாளா ஆறாங்க.
விகடன்: உங்களோட வளர்ச்சியில யாருக்கு பங்கு உண்டு? உங்க காட்பாதர்னு யாரை சொல்லுவீங்க?
கவுண்டர்: (கலகலவென சிரிக்கிறார்..) இது என்ன மாபியா கேங்கா? காட்பாதர் இருக்கறதுக்கு! 'ஒருத்தன் வளர்றது இன்னொருத்தனுக்கு பிடிக்காது'ன்னு நான்தான் சொல்றேனே. ரஜினி இவ்வளவு உயரத்துல இருக்காருன்னா அவரை சுத்தி இருக்குறவங்களுக்கு சந்தோஷம்னா நினைக்கறீங்க?.. சூப்பர் ஸ்டார்னு புகழராங்களே தவிர, சொந்தக்காரங்க கூட உள்ளுக்குள்ளே எரிச்சலோடதான் இருப்பாங்க. இதுதான் உலகம். இதுதான் எனக்கும்.
விகடன்: ஒரு நடிகன் எப்படி இருக்க வேண்டும்?
கவுண்டர்: தன்னைப்பத்தின நிஜ ரூபத்தை பொத்தி பொத்தி மூடணும். பெட்டிக்கடையில பீடியைக்கூட கட்டுக்கட்டா உள்ளேதான் வெச்சிருப்பான். அப்போதான் அதுக்கு மரியாதை. அள்ளி வெளியே கொட்டிப்பரத்தி வியாபாரம் பண்ணிப்பாருங்க..பீடி விக்காது. நான் விழாக்கள், பேட்டிகள்னு எதுக்கும் ஒப்புக்கறதில்லை. 'கலை நிகழ்ச்சி' என்ற பேரில் துபாய், சிங்கப்பூர் போறதில்லே. ரசிகர் மன்றம் இருந்தது. இப்ப மன்றத்தை எல்லாம் கலச்சிட்டேன். என் பிறந்த நாள் என்னன்னே மறந்து போச்சி. முக்கியமா டி.வி.க்கு பேட்டி குடுக்கறதில்ல. கவுண்டமணியை சினிமாவுல மட்டும் பாரு..அப்பதான் கிக்!
....சில நிமிட மௌனத்திற்கு பின் கேள்வி கேட்காமலே சொன்னார்...
இது ஒரு ட்ரெண்டுங்க. நம்ம காமடியை ஒப்புக்கறாங்க. அதை அழகான மேக்கப் போட்டுட்டு வந்து பண்ணக்கூடாதா? முகத்தை அசிங்கம் பண்ணிட்டு, மண்ணாங்கட்டி அது இதுன்னு பேர் வச்சிக்கிட்டு வந்தாதான் காமடியா?! காமடிக்காகவே கோண மூஞ்சிக்காரங்களை தேடிப்பிடிக்கறது அக்கிரமம். அட ஜனங்க ரெண்டு மணிநேரம் நம்ம முகத்தை பாக்க வேண்டாமாங்க? என்னைக்கேட்டா நகைச்சுவை நடிகன்தான் அழகா, நீட்டா ப்ரெஷ்ஷா இருக்கணும்.
..பேட்டியின் போது போட்டோ எடுக்க அனுமதிக்கவில்லை....
அதற்கு அவர் சொன்ன பதில் "மேக்கப் இல்லாம போட்டோ எடுக்க போஸ் குடுக்குறது இல்லைங்க" என்கிறார் தலையை தடவியபடி. குடும்பத்தை படம் எடுப்பதற்கும் மிகப்பெரிய தடை போடுகிறார்.
"முடியாதுங்க. இதுவரைக்கும் என் பேமிலி படம் எதுலயாச்சும் பாத்து இருக்கீங்களா? தர்றதே இல்லை. எனக்கு ரெண்டு பொண்ணுங்க. நல்ல சந்தோஷமான குடும்பம். அவங்களை பொறுத்தவரை நான் காமடி கவுண்டமணி கிடையாது. ஏதோ ஒரு வேலைக்கு போறேன். கூலி வாங்கிட்டு வர்றேன். அதை வச்சி குடும்பம் நடத்துறது அவங்க வேலை. என் குடும்பத்து ஆளுங்க இன்னிவரைக்கும் ஷூட்டிங் பாத்தது கிடையாது. என்னை ஒரு நடிகனா வீட்ல யாரும் பாக்கக்கூடாது. அது வேற..இது வேற.
உம்முன்னு உட்காந்துட்டு இருக்குறவங்க எல்லாம் தனியா எதுனா அள்ளிட்டா போகப்போறாங்க? அப்புறம் எதுக்கு பொறக்கணும்? என்னைப்பொறுத்தவரை நாலு பேரைப்பாக்கணும், நாலு விதமா பேசணும், சந்தோஷமா சிரிக்கணும். அவ்வளவுதான் வாழ்க்கை. இருக்கிற வரைக்கும் சிரிப்போம்...ரைட்டா?"